என் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, August 25, 2016

க்ளிக்கோமேனியா – அரை டிக்கெட்ஒரு அவசர வேலையாக சென்னை வரவேண்டியிருந்தது. தில்லியிலிருந்து இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் பார்த்தால் Second AC டிக்கெட் [ராஜ்தானியை] விடவும் குறைவாக இருக்க, விமானத்தில் பயணம் செய்ய பதிவு செய்தேன். பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்யக் கூட நேரமில்லை. முடிந்த அளவு வேலைகளை முடித்துக் கொண்டு தில்லி நகரின் முதலாம் டெர்மினலுக்கு வந்து சேர்ந்து, Indigo counter-க்குச் சென்றால் நீண்ட நெடிய வரிசை. சாதாரணமாக விரைவாக நகரும் வரிசை ஏனோ மிகத் தாமதமாக நகர்ந்து கொண்டிருந்தது.

ஹிந்தி தெரியாத ஒரு தெலுங்குக்காரர், ஆங்கிலத்தில் Counter பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். Boarding துவங்கிய பிறகு வந்ததாக Counter பெண் சொல்லி, புதிய டிக்கெட் வாங்கச் சொல்ல, பயங்கர வாக்குவாதம். Indigo-வின் Floor Manager அங்கும் இங்கும் ஓடி நிலைமையைச் சீராக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். என் முறை வர, ஜன்னலோர இருக்கை வாங்கிக் கொண்டு Security Clearance-க்கு முன்னேறினேன். அங்கு சோதனைகளை முடித்துக் கொண்டு விமானத்திற்குள் செல்ல பேருந்தில் சென்றால் எங்கள் விமானம் வெகு தொலைவில் நிறுத்தி வைத்திருந்தார்கள். பேருந்திலேயே நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருந்தது!

ஒரு வழியாக விமானத்திற்குள் சென்று எனக்கான 6-A இருக்கையில் அமர்ந்தேன். ஜன்னல் வழியே வெளியே பார்க்க, ஒரு சக பயணி, கையில் டிஜிட்டல் கேமராவுடன் பார்க்கும் காட்சிகளையெல்லாம் கிளிக் செய்தபடி அவருக்கு பின்னால் வரும் பயணிக்கு வழி கொடுக்காமல் நின்று கொண்டிருந்தார். பொருட்களை எப்படி விமானத்திற்குள் ஏற்றுகிறார்கள், பணியாளர்கள் என்ன செய்கிறார்கள் என அனைத்தும் கிளிக்கோ கிளிக்! ஒரு வழியாக விமானத்திற்குள் வந்து எனக்கு முன்னே இருக்கும் 5-A சீட்டில் அமர்ந்தார். அமர்ந்த பின்னும் கிளிக்குவது நிற்கவில்லை. ஏகப்பட்ட க்ளிக்குகள்!

அதற்குள் பின்பக்கத்திலிருந்து ஏதோ சத்தம். தலைமை Air Hostess, முன்னும் பின்னும் சென்று Ground Crew-உடன் எதையோ சத்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை. சரியான நேரத்திற்கு விமானத்தினை எடுப்பார்களா என்ற சந்தேகம் எனக்குள்....  சிறிது நேரத்தில் இன்னும் நிறைய Indigo ஊழியர்கள் விமானத்தினுள் பின்பக்கம் நோக்கி சென்று பயணி யாருடனோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். மற்ற பயணிகள் அனைவருக்கும் பதட்டமும், விஷயம் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் – ஊழியர்களிடம் கேட்டால் அவர்கள் பதிலேதும் சொல்லாது முன்னும் பின்னும் சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வழியாக பின்பக்கத்திலிருந்து ஐந்து பயணிகள் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு விமானத்திலிருந்து வெளியே வந்தார்கள் - அதில் ஒருவர் ஒரு பெரிய போர்வையைப் போர்த்திக் கொண்டு நடுங்கியபடி நடந்தார். அவருக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்திருக்கிறது. பயணம் செய்தால், பயணித்தின் போது எதுவும் அசம்பாவிதமாக நடக்கலாம் என்பதால் தலைமை Air Hostess அவர் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. கீழே இறங்கச் சொல்ல, அதான் பிரச்சனை. உடல்நிலை சரியில்லாதவரும் அவருடன் வந்த மற்ற நான்கு பயணிகளும் மொத்தமாக விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட, Indigo Ground Crew இருக்கும் பயணிகளின் Cabin Luggage-ஐ மீண்டும் சரிபார்த்து விமானம் புறப்பட All Clear Signal கொடுத்தார்கள் – மொத்தமாக 45 நிமிடம் தாமதம்! 

இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்க, நமது டிஜிட்டல் கேமரா நண்பர் எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாது வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.  விமானம் புறப்பட்ட பிறகும் க்ளிக்குவது நிற்கவில்லை! நல்ல வேளை விமானத்தின் உட்புறங்களையும், சக பயணிகளையும், Air Hostess-ஐயும் புகைப்படமோ, வீடியோவோ எடுக்கவில்லை.  சென்னை வந்து இறங்கும் வரை க்ளிக்ஸ் சத்தம் கேட்டபடியே இருந்தது! இரண்டரை மணி நேரத்தில் 400 முதல் 500 படங்கள் எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.....

ஃபோட்டோ எடுப்பது எனக்கும் பிடித்தமான விஷயம் தான் என்றாலும் ஏனோ எனக்கு இது கொஞ்சம் ஓவராகவே இருந்தது! இது ஒரு வேளை க்ளிக்கோமேனியாவோ என்ற யோசனையும் வந்தது. சரி நம்மைப் போல பதிவராக இருப்பாரோ என்ற எண்ணமும் வந்தது! :) நான் பயணிக்கும்போதும் புகைப்படங்கள் எடுத்தாலும், வேறு யாராவது என்னைப் பார்த்து எனக்கும் க்ளிக்கோமேனியா என நினைத்திருப்பார்களோ என்ற சிந்தனை வர, கொஞ்சமாக புன்னகைத்தேன். பக்கத்து சீட்டில் இருந்த ஒரு ஜீன்ஸ் பெண்மணியும் என்னைப் பார்த்துக் கொஞ்சம் புன்னகைத்தார்! அவர் எதற்கு சிரித்தார் என்ற சிந்தனையும் சேர்ந்து கொண்டது!

ஒரு வழியாக, க்ளிக் சத்தம் கேட்டபடியே அலைபேசியில் தரவிறக்கம் செய்து வைத்த தமிழ் புத்தகங்களைப் படித்துக் கொண்டே சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தேன்.  சென்னையில் அலுவலக வேலைகளை முடித்துக் கொண்டு திருச்சி நோக்கி பேருந்தில் பயணிக்க, அங்கே ஒரு குடும்பம், அப்பா, அம்மா, பத்து வயது மகள் மூவரும் பாடாலூருக்கு இரண்டு டிக்கெட் கேட்க, பேருந்தின் நடத்துனர் “இந்தப் பாப்பாவுக்கு டிக்கெட்?என்று கேட்க, சின்னப் பாப்பாதாங்க, அதுக்கு எதுக்கு டிக்கெட்?என்று கேட்க, நடத்துனர் மயக்கம் போடாத குறை! நேத்து ராத்திரி ப்ரிவேட் பஸ்லையே பாப்பாவுக்கு டிக்கெட் எடுக்கல!  என்றும் சொன்னார். 

நடத்துனர், அவரிடம் அதெல்லாம் தெரியாதும்மா, இது அரசு பஸ்மா, அரை டிக்கெட் எடுத்து தான் ஆகணும், செக்கர் வந்தா, உனக்கு மட்டுமல்ல, எனக்கும் பிரச்சனை, ஒழுங்கா டிக்கெட் எடும்மா, தொந்தரவு பண்ணாத!என்று சொல்ல அரை மனதோடு, நடத்துனரை நோக்கி அக்னிப் பார்வையை வீசி காசு கொடுத்து டிக்கெட் வாங்கினார். புருஷனுக்கும் திட்டு விழுந்தது. பதினோரு வயசு பாப்பாவுக்கு டிக்கெட் கேட்கறாரே, இந்த அனியாயத்தைக் கேட்க மாட்டியா!....”  டிக்கெட் வாங்கி சில நிமிடங்களுக்குள் ஒரு டோல் கேட்! அங்கே இரண்டு டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்தில் ஏறி எல்லோரிடமும் டிக்கெட் பரிசோதனை செய்தார்கள்! அவரிடம் வாயைத் திறக்கவில்லை அந்தப் பெண்மணி!

மேலும் பல அனுபவங்களோடு திருச்சி வந்து சேர்ந்தேன்! ஒரு சில அனுபவங்கள் வேறொரு பதிவில்!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து.....