புதன், 28 ஏப்ரல், 2010

இப்படி செய்ய யாரால் முடியும்?

இந்திய நாட்டில் உள்ள எல்லா தரப்பு மக்களும் கங்கணம் கட்டிட்டு உத்திர பிரதேச முதல் மந்திரி குமாரி மாயாவதியோட பலவிதமான கொள்கைகளையும் செய்திகளையும் தப்பாவே சொல்லிக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் நான் சொல்றது இது தான் – அவிய்ங்க “ரொம்ப நல்லவங்க!”.

நம்ம ஊர்ல எல்லா அரசியல்வாதிக்கும் சிலை இருக்கறதுனால காக்கா, குருவிக்கெல்லாம் பிரச்சினையே இல்லை. உத்திரபிரதேசத்தில அவ்வளவா காக்கா இல்லை, ஆனா லட்சக்கணக்கில புறாக்கள் இருக்கு, அத்தனை புறாவும் காலைக் கடன் கழிக்கணும்னா எவ்வளவு சிலை வச்சாலும் பத்தாது. அதுனாலதான் மாநிலம் முழுசும் கன்ஷிராம் சிலையையும் தன்னோட சிலையையும் கிடைக்கிற எல்லா இடத்திலேயும் வைச்சு புறாக்களுக்குத் தன்னால ஆன உதவி செய்யறாங்க. அந்த புறாக்கள் போன ”கக்காவ” சுத்தம் செய்ய “கக்கா க்ளீனிங் ஃபோர்ஸ்” உருவாக்கி நூற்றுக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு வேற கொடுத்திருக்காங்க. இதையெல்லாம் பாராட்டாம எல்லோருமா சேர்ந்து அவங்களை திட்டறாங்க. சே! அவங்களெல்லாம் ரொம்ப மோசம்.

செல்வி மாயாவதிக்கு போட்ட நோட்டு மாலை விஷயம் மேல சொன்னத விட இன்னும் மோசமுங்க. நம்ம ஊர்ல நிறைய பெண்கள் ”காசு மாலை” தங்கத்துல செஞ்சு போட்டுக்கறாங்க. இங்க வடக்கில் நடக்கும் எல்லா கல்யாணத்துலயும் மாப்பிள்ளை குதிரை மேல ”ஜாம் ஜாம்”னு ஒக்காந்துக்கிட்டு ரூபாய் நோட்டு மாலையையும் போட்டுக்கிட்டு, போற வழியெல்லாம் ”ட்ராஃபிக் ஜாம்” உண்டாக்கறாருங்கோ. அவங்களையெல்லாம் யாருமே ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறாங்களே. குமாரி மாயாவதி என்ன அவங்களாவே நோட்டு மாலையை செய்யச் சொல்லி போட்டுக்கிட்டாங்க? தொண்டர்கள் போட்ட மாலையைத்தானே பணிவா ஏத்து போட்டுக்கிட்டாங்க? அதுக்கு எதுக்கு எல்லோருமா சேர்ந்து ரகளை பண்ணுறாங்க? இந்த செய்தியை படிச்ச உடனே எனக்கு ஒரே அழுகாச்சியா வந்துடுச்சு தெரியுமா?

நேத்திக்கு அவங்க பண்ணுன ஒரு விஷயம் மாதிரி யாரால செய்ய முடியும். பெரிய பெரிய மகான்களால தான் இப்படி அப்பட்டமா உண்மையை ஒத்துக்க முடியும். உத்திர பிரதேசத்தின் லலித்பூர் பகுதியில் 1980 மெ.வா மின் நிலையத்தினை திறந்து வைத்தது பற்றி எல்லா தினசரிகளிலும் ஒரு விளம்பரம் போட்டு இருக்காங்க. ”An Significant Step to ensure interrupted power supply…”. உண்மைய இப்படி ஒத்துக்கற தைரியம் நம் நாட்டுல வேறே யாருக்காவது இருக்கான்னு நீங்களே சொல்லுங்க.



உண்மையா இருக்கறத கூட நிறைய பேரால தாங்க முடியாததால அடுத்த நாளே திரும்ப ஒரு விளம்பரத்தைப் போட்டு அதுல ”A Significant Step to ensure Uninterrupted power supply…” என்று பொய் சொல்லிட்டாங்க குமாரி மாயாவதி!.

திங்கள், 26 ஏப்ரல், 2010

இதுதாண்டா மைசூர்பாக்!




என் நண்பருக்கு சமையல்ல ரொம்பவுமே ஈடுபாடு! அவ்வப்போது எதாவது புதுப்புது முயற்சில இறங்கிப் பார்த்துடுவார். போன தீபாவளி சமயத்தில அவருக்கு மைசூர்பாகு பண்ணனும்னு ஆசையோ ஆசை. அதுனால வேட்டியை மடிச்சிக் கட்டிட்டு சமையல் களத்தில இறங்கிட்டாரு. இருக்கிற எல்லா சமையல் குறிப்பு புத்தகங்களையும் புரட்டிப்போட்டு “மைசூர்பாகு” செய்வது எப்படின்னு ஒரு சிறிய பேப்பர்ல அவரோட குறிப்ப எழுதி வைச்சுக்கிட்டு என்னவோ “கிருஷ்ணா ஸ்வீட்ஸ்” காரங்களுக்கே தான் தான் மைசூர்பாகு செய்ய சொல்லிக் கொடுத்த மாதிரி சமையலறைக்குள் நடிகர் பி.எஸ்.வீரப்பா மாதிரி வெகு வீராப்பா போனார்.

சிறிது நேரத்தில் சமையலறையிலிருந்து பலவிதமான வாசனைகள். அதுல நெய் வாசனை மட்டும் கொஞ்சம் அதிகமாகவே வர ஆரம்பித்தது. அப்பப்ப வாணலில கரண்டி தட்டற சத்தமும் கூடவே முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை எல்லாம் நெய்ல வருத்து போட்டாதான் “மைசூர்பாகு” எடுப்பா இருக்கும்னு நடுநடுவுல அவரோட நிபுணர் கருத்து வேற எங்கள் காதில் விழுந்தது. பலமான எதிர்பார்ப்போடு நாங்க எல்லோரும் வெளியே காத்திட்டிருந்தோம்.

பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வாணலியில் இருந்ததை நெய் தடவி வைத்த ஒரு தட்டில் கொட்டி சமமாக பரப்பி வெளியே கொண்டு வந்து எங்களின் முன் வைத்துவிட்டு “கொஞ்ச நேரம் ஆறட்டும், அப்புறம் கத்தியால துண்டு போட்டு சாப்பிடலாம்” என்று சொன்னவரின் வாயிலிருந்து இன்னொரு முத்தான நிபுணர் கருத்தும் உதிர்ந்தது. “பாருங்க, பார்க்கும் போதே சாப்பிடணும்போல இருக்கு இல்ல!” என்று.

கொஞ்ச நேரத்துக்கப்புறம் ஒரு கத்தியில் நெய்யைத் தடவி தட்டுல இருந்ததைத் துண்டு போட களமிறங்கினார். கத்தி உள்ளே போகாததால இன்னும் கொஞ்சம் பலமா அழுத்தினதில் கத்தி உடைஞ்சு துண்டா போச்சு. “சே ஒரு கத்திகூட இந்த வீட்டுல சரியா இல்ல!”-ன்னு சலிச்சுக்கிட்டே வேறு ஒரு கத்தியால் முயற்சி பண்ணார். கொஞ்ச நேர போராட்டத்துக்குப் பின் அலைபேசியை எடுத்து யாரு கிட்டயோ பேசி இந்த கதையை சொல்லி இதை சரி செய்ய எதாவது வழி இருக்கான்னு கேட்டார்.

அவர் அதன் மேல் கொஞ்சம் பாலை விடச் சொன்னார் போல. சரின்னு அரை லிட்டர் பாலை விட்டா அது ஊறி வந்துடும், அப்புறம் துண்டு போடலாம்னு நினைச்சா தட்டில் இருந்த மைசூர்பாகு ‘உனக்கும் பெப்பே, நீ விட்ட பாலுக்கும் பெப்பே”னு நண்பரைப் பார்த்து சிரிச்சது. சோகத்தோடு அந்த தட்டை எடுத்து ஃப்ரிட்ஜ்ல வைச்சு கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்துட்டு திரும்பவும் முயற்சி பண்ணார். நாங்க வீட்டுல இருந்த சுத்தி, உளி எல்லாம் எடுத்து அதை உடைச்சா, சில்லு சில்லா வந்தது. அதை எடுத்துப் போட்டு மிக்ஸில ஒரு ஓட்டு ஓட்டி திரும்பவும் வாணலியில் நெய்யைக் கொட்டி அதில் போட்டு கிளறினார். அது ஒரு மாதிரி அல்வா பதத்துக்கு வந்ததும் சூட்டோட அதை உருண்டைகளா உருட்டி “இது தாண்டா மைசூர்பாகு”-னு எங்களுக்கெல்லாம் கொடுத்துட்டு குளிக்கப் போய்ட்டார்.

போவதற்கு முன்னாடி "இந்த மைசூர்பாகு அல்வாவை வாயில போட்டா நெய் மாதிரி கரையும்"-னு வேற சொன்னார். நாங்களும் அதை நம்பி வாயில போட்டு ஒரு கடி கடிக்க ரொம்ப நாளா ஆடிட்டு இருந்த என் இன்னொரு நண்பரின் ஒரு பல் "அய்யய்யோ நம்மால முடியாதுப்பா"-ன்னு வாயில இருந்து தாவி வெளியில் வந்து விழுந்ததுதான் மிச்சம்.

சரி பசிக்கு கொஞ்சம் தண்ணியையாவது குடிச்சு வைப்போம்னு சமையலறைக்குப் போனா – அது ஒரு யுத்த பூமி மாதிரி களேபரமா இருந்தது. அதைச் சுத்தம் செய்யவே இரண்டு மணி நேரம் ஆச்சுன்னா பாருங்களேன்.

இப்ப கொஞ்ச நாளா “ஜாங்கிரி” செய்யப்போறேன்னு எங்களை எல்லாம் கதி கலங்க வச்சிகிட்டு இருக்காரு. "யாராவது எங்களை காப்பாத்துங்களேன்!" ப்ளீஸ்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

தலை நகரிலிருந்து – பகுதி 8

”என்னம்மா கண்ணு, ஏதோ 6-7 பகுதிகள் ”தலைநகரிலிருந்து…”ன்னு போட்டுட்டு அதைத் தொடராம அப்படியே தொங்கவிட்டுட்டயே, அவ்வளவுதானா?"ன்னு ஏகப்பட்ட மின்னஞ்சல்கள் வந்துடுச்சு! [விளையாட்டு இல்லைங்க, நிஜமாத்தாங்க!!!]. ரசிகர்களோட வேண்டுகோளை மதிச்சு இதோ எட்டாவது பகுதி.



பார்க்க வேண்டிய ஒரு இடம்: ”குதுப்மினார்”: “Delhi Local Sight Seeing” "Panicker Travels" போன்ற எந்த நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்து நீங்க போனாலும் கண்டிப்பாக
“குதுப்மினார்” அழைத்துக்கொண்டு போவார்கள். 234 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தை ”தோமர் ராஜ்புத்”களிடமிருந்து தில்லியை கைப்பற்றியதை கொண்டாடுவதற்கு மஹாராஜா ப்ருத்விராஜ் அவர்கள் கட்டுவிக்க ஆரம்பித்து வைத்தார். பிறகு மொகலாய மன்னர் குத்புதின் அவர்களது காலத்தில் இந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. ஏறத்தாழ பத்து-பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை கூட இந்த கோபுரத்தின் உட்பகுதியில் அமைக்கப்பட்ட படிகள் மூலம் மேல் நிலை வரை சென்று தில்லி முழுவதையும் காண முடிந்தது. சில விபத்துக்களுக்குப் பிறகு, இந்த படிக்கட்டுகள் மூடி வைக்கப்பட்டு விட்டன. சுற்றிலும் பூங்காக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.



மொகலாய மன்னர் அலாவுதின் இந்த குதுப்மினாரைபோல இரு மடங்கு உயரம் கொண்ட ஒரு கோபுரத்தினை கட்ட ஆரம்பித்து முடியாமல் விட்டதையும் இந்த இடத்தில் நீங்கள் காணமுடியும்.




இங்கே உள்ள ஒரு இரும்புத் தூண் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் துருப் பிடிக்காமல் கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறது. நமது கைகளை பின்பக்கமாக கொண்டு சென்று அத்தூணை முழுவதுமாக அணைத்துப்பிடித்தால் நாம் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை இங்கே நிறைய பேருக்கு உண்டு. கோடானு கோடி மக்கள் “கட்டிப்பிடித்து” தொந்தரவு செய்ததாலோ என்னவோ இப்பொதெல்லாம் இந்த இரும்புத்தூணைத் தொடக்கூட அனுமதிப்பதில்லை!

சாப்பிட வாங்க: குதுப்மினாரிலிருந்து வெளியே வந்தவுடன் வறுத்தெடுக்கும் இக்கோடையில் பருக ஒரு சிறந்த பானம் “ஷிக்கஞ்சி”! ஒரு குவளையில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சிறிது கருப்பு உப்பு அல்லது சக்கரை போட்டு அதன் மேல் குளிர்ந்த கோலி சோடா அல்லது தண்ணீர் விட்டுக் கலக்கி மேலே இரண்டு சொட்டு புதினா சாற்றினைப் பிழிந்து குடித்தால், இப்போதைய நாற்பது டிகிரி வெய்யிலில் அமிர்தமாக இருக்கும். அச்சு அசல் நம் ஊர் எலுமிச்சை ஜூஸ் போலவே தான், அதன் கூடவே புதினா சாறு. வெய்யிலுக்கு இதமாக இருக்கும் இதைக் குடித்துத் தான் பாருங்களேன்.

இந்த வார ஹிந்தி சொல்: வெய்யில் காலம் வந்த உடனே இங்குள்ள பேருந்துகள், சாலை சந்திப்புகள் எல்லாவற்றிலும் ஒரு தட்டில் “கோலா கரி” [Ghola Gari] வைத்து தண்ணீர் தெளித்து விற்பதைக் காண முடியும். “கோலா கரி”ன்னா எதோ ”கறி”ன்னு பயப்படவோ, ஆசைப்படவோ வேண்டாம். தேங்காயைத் தான் இங்கே கோலா, நாரியல் என்றெல்லாம் அழைக்கிறார்கள். தேங்காயைத் துண்டு போட்டு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என துண்டின் அளவைப் பொருத்து விலைவைத்து விற்கிறார்கள். அதையும் வாங்கி சாப்பிடுகிறார்கள் இவ்வூர் மக்கள். கஷ்டம்டா சாமி!

இன்னும் வரும்…

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்



ஏப்ரல் 13 தேதியிட்ட “டைம்ஸ் ஆஃப் இந்தியா” நாளிதழில் வந்துள்ள செய்தியின் சுருக்கம் கீழே:

”ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தண்ணீர் திருடு போவதை தடுப்பதற்காக நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 முதல் 200 வரை பணம் கொடுத்து தனியார் பாதுகாவலர்களை ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களது முக்கிய வேலை நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் திருடுபோவதை தடுப்பதும், கிராமத்தில் உள்ள 8000 மக்களுக்கும் வீட்டில் உள்ள மனிதர்களின் எண்ணிக்கையை பொறுத்து தண்ணீர் உபயோகத்தை முறைப்படுத்துவதும் தான். மிருகங்கள் தண்ணீர் அருந்துவதை தடுப்பதும் இவர்களது கூடுதல் வேலை. கடுமையான உழைப்பினால் கிடைக்கும் கூலியில் பெரும்பகுதியை அவர்கள் தண்ணீர் திருட்டை தடுக்க உபயோகப்படுத்துகிறார்கள்.”


தண்ணீர் எல்லா உயிரினங்களுக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதை நாம் மறக்கக்கூடாது. இருக்கும் நீர்நிலைகளில் எல்லாம் தண்ணீர் வற்றியும், வறண்டும் போய்க்கொண்டிருக்கிறது. பல மாநகரங்களில் ஏரிகள், குளங்கள் இருந்த இடமெல்லாம் வீடுகளாகவும் அலுவலகங்களாகவும் உருமாறிக்கொண்டு இருப்பதை நினைத்தால் மனதில் கலக்கம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.

கங்கா, யமுனா, கிருஷ்ணா, காவிரி போன்ற ஆறுகள் வருடத்தின் பல நாட்களில் தண்ணீர் இல்லாமல் காட்சி அளிக்கிறது. தில்லி நகரில் யமுனை நதியைப் பார்த்தால் ஏதோ ஒரு சாக்கடையை பார்ப்பது போன்ற உணர்வுதான் மிஞ்சுகிறது. நகரின் கழிவுகள், தொழிற்ச்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் எல்லாவற்றையும் யமுனை நதியில் சேரும்படி வைத்திருக்கிறார்கள். இவர்களை கண்டிப்பதற்கு யாரும் எந்தவிதமான முயற்சியும் எடுக்க முன் வருவதில்லை.

நதிகளைச் சுத்தம் செய்யும் கணக்கிலே பல கோடிகள் செலவானதாக கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறோம். ”Crores and Crores of Rupees Going Down the drain” என்ற வாசகத்தினை உண்மையாக்குவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்கிறோம். அத்தனை பணமும் யாருடைய சட்டைப்பைக்குள் செல்கிறது என்பது அந்த இயற்கைக்கே வெளிச்சம்.

தில்லியில் பலபேர் தங்கள் வீடுகளில் இருக்கும் இரும்புக் கதவுகளை தண்ணீர் குழாய் கொண்டு சுத்தப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதற்கு எவ்வளவு தண்ணீர் விரயமாகிறது என்பதைச் சுட்டிக்காட்டினால் நம்மை ஏதோ புழு பூச்சியைப்போல பார்த்து அவர்களது தவறை தொடர்கிறார்கள்.

அரசையும் அடுத்தவர்களையும் குறைசொல்வதில் எந்த பயனும் இல்லை. ஒவ்வொரு தனிமனிதனும் தண்ணீரை சிக்கனமாக உபயோகப்படுத்தினால் அதுவே நல்ல ஒரு தொடக்கமாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்த தமிழ்ப்புத்தாண்டில் நாமெல்லோரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான சில தீர்மானங்களை எடுத்துக் கொள்வோமாக. இல்லையெனில் ராஜஸ்தான் மாநிலம் போலவே இந்தியா முழுவதும் தண்ணீருக்காக பாதுகாவலர்களை அமர்த்துவதும், கொலை, கொள்ளை போன்றவைகள் சர்வசாதாரணமாக நடப்பதையும் நாம் பார்க்க நேரிடலாம். ஆகவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோமாக!

குறிப்பு: இந்த பதிவு என்னுடைய ஐம்பதாவது பதிவு. பதிவுலகம் எனக்கும், எனது பதிவுகளுக்கும் அளித்த மேலான வரவேற்ப்புக்கும், பகிர்ந்த கருத்துகள் அனைவற்றிற்கும் இந்த பதிவின் மூலம் எனது அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், 12 ஏப்ரல், 2010

தமிழ் மக்களுக்கு ஒரு நற்செய்தி!




தமிழ் மக்களே! நாம் எல்லோரும் சீக்கிரமாகவே இளைய தளபதி விஜய்யோட ”காவியங்களி”-லிருந்து தப்ப வேண்டுமா? அதுக்கு ஒரு நல்ல வழி சொல்றேன். அவரிடம் போய் நீங்க ஹிந்தி படத்துல நடிச்சீங்கன்னா உங்களுக்கு ஆஸ்கர் நிச்சயம்னு சொல்லி அவரை ஒரேயடியா புகழ்ந்து தள்ளி அவரை பாலிவுட் பக்கம் அனுப்பி வைக்கிற வழியைப் பாருங்க. அவர் ”நான் மறத்தமிழன், தமிழ் மக்களுக்காகவே வாழ்வேன், அவர்களுக்காகவே தமிழ் படங்களில் மட்டுமே நடிப்பேன்” அப்படி இப்படின்னு சொன்னாலும் விடவே விடாதீங்க.

அவர் அப்படி சொல்வதற்கும் காரணம் இருக்கலாம். “ஆமா, தமிழ்ல பேசி நான் நடிக்கிற படம் எல்லாமே ஊத்திக்கிது, இதுல ஹிந்தி படத்துல வேற நடிக்கணுமா? கேட்கவே வேணாம், கண்டிப்பா பெட்டிய உட்டு வெளில வரவே வராது” என்ற பயமும் இருக்கலாம்.

இப்படியெல்லாம் அவர் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவர் புகழ் எவ்வளவு தூரம் பரவியிருக்குன்னு பாவம் அவருக்குத் தெரியல! கண்டிப்பா அது மட்டும் அவருக்குத் தெரிஞ்சா உடனே மும்பைல ஒரு வீட்டை வாங்கிப் போட்டுட்டு பாலிவுட் படத்தில நடிக்க[!] ஹாயா கிளம்பிடுவார், நம்ம தமிழ் மக்களுக்கும் அவருடைய படத்தை பார்ப்பதிலிருந்து கொஞ்ச காலத்திற்கு விடுதலை கிடைக்க நல்லதொரு வாய்ப்பாக அமையும்.

கடந்த ஒரு வாரத்திலேயே நான் ஐந்து-ஆறு ஹிந்திக்காரங்க அவங்களோட மொபைல்ல இளைய தளபதியோட கில்லி படத்தில வர ”அப்படி போடு போடு கண்ணாலே” பாட்டைப் போட்டுக் கேட்டுட்டு இருந்ததைப் பார்த்தேன். அப்படி கேட்டவங்க யாருக்குமே தமிழ் சுட்டுப் போட்டாலும் வராது, ஆனாலும் அப்படி ஒரு ஈடுபாடோட, உணர்ச்சிவசப்பட்டு, பரவச நிலையில இருந்தாங்க. ”தில்லி மெட்ரோ”-ல ஒரு பையன் என்னடான்னா ஒரு படி மேலே போய் அந்த பாட்டை அலைபேசியில் இரண்டு மூன்று தடவை கேட்டபடியே கையக் காலை அசைச்சு, பக்கத்தில இருக்கவங்க கண்ணை பதம் பாத்துக்கிட்டிருந்தான்.

இதுவாவது பரவாயில்ல, நேத்து வீட்டுக்கு பின்னாடி ஒரு ஹிந்தி பையனுக்கு பிறந்த நாள் விழான்னு போனா, இந்த கருத்தாழமிக்கப் பாட்ட அலற விட்டுட்டு ஒரே ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்.

அதனால தாய்த் தமிழ் நாட்டுல இருக்கற மக்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். இளைய தளபதிக்கு ஹிந்தி மக்கள்கிட்ட இருக்கிற வரவேற்பை அவரிடம் சீக்கிரமாவே தெரிவிங்க! ஏதோ நம்மால ஆன உதவி செய்வோமே என்ற நல்லெண்ணம் தான் [கூடவே அவர்கிட்ட இருந்து நம்மை எல்லாம் காப்பாத்திக்கலாம் என்ற நப்பாசையும்!].

வியாழன், 8 ஏப்ரல், 2010

அப்புறம் என்ன ஆச்சு?




அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் ஒருவர் நல்ல வாட்டசாட்டமாக இருப்பார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ”பீம் பாய்” வேடத்தில் வரும் ப்ரவீன் குமார் மாதிரி பைசெப்ஸ், ட்ரைசெப்ஸ் எல்லாம் கிடையாது, ஒரே செப்ஸ் தான். தலையிலிருந்து கால் வரை ஒரே சைஸ். அங்கங்கே எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக சதை தொங்கிக்கொண்டு இருக்கும் ஒரு 102 கிலோ சிலிண்டர் உருவம். உருவம்தான் அப்படியே தவிர உள்ளத்தில் அவர் ஒரு குழந்தை போல.

நேற்று காலை அலுவலகத்துக்கு சிறிது தாமதமாக வந்த அவரிடம் தாமதத்திற்கான காரணத்தைக் கேட்ட போது வெகு சோகமாக அவர் சொன்ன பதில் இது. ”என்னதுன்னு தெரியல, உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கு, ஜலதோஷம், இருமல்ன்னு எதுவும் இல்லை, ஆனா ஜுரம் மட்டும் வர மாதிரி இருக்கு” என்று காலை சொரிந்து கொண்டே சொன்னார். காலில் பார்த்தால் ஏதோ கடித்தது போன்ற தடம்.

”என்ன ஆச்சு, ஏதாவது கடித்ததா? உங்க வீட்டுல நாய் இருக்கா?” என்று நான் கேட்கவும், ”ஓ எங்க வீட்டுல ஒரு நாய் இருக்கே!” என்று சந்தோஷமாக சிறு குழந்தை போல குதித்துக்கொண்டே சொன்னார். ”ஒருவேளை அது உங்க காலை பிராண்டி இருக்குமோ?” என்று நான் ஒரு குண்டைப் போட, ”அப்படி எல்லாம் அது கடிக்காது, ரொம்ப நல்ல நாய். எனக்கும் என் தம்பிக்கும் நடுவுல தான் அது படுத்து தூங்கும்னா பார்த்துக்கோங்க!” என்று சொன்னார். ”சரி எதுக்கும் ஒரு மருத்துவரைப் பார்த்து மருந்து வாங்கி சாப்பிடுங்க!” என்று கூறி அவரை அனுப்பி வைத்தேன்.

அடுத்த நாள் காலையில் அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. "உடம்புக்கு ரொம்ப முடியலை, அதனால வரமுடியாது" என்று. என்ன ஆச்சு என்று கேட்டதற்கு மருத்துவர் சொன்னதாக அவர் சொன்னது இது. ”கடிச்ச தடத்தை பார்த்தா அது நாய் கடிச்ச மாதிரி இல்லை எலி கடிச்ச மாதிரி இருக்கு, உங்க வீட்டுல எலி இருக்கா?” ”ஓ எலியும் எங்க வீட்டுக்கு வருகிற முக்கிய விருந்தாளிகளில் மிகவும் முக்கியமான நபர்” என்று இவரும் சந்தோஷமாக சொல்ல, டாக்டர் இவருக்கு ஐந்து ஊசி போட்டு அனுப்பி வைத்தாராம்.

“ஐயோ ஐந்து ஊசியா, உங்க எடைக்குத் தகுந்தாற்போலவா?” என்று பதறியபடி நான் கேட்க அதற்கு அவர் சொன்ன பதில் ”தெரியல, ஒரு வேளை கடிச்ச எலியும் என்னை மாதிரி பெருத்த உருவமாக இருந்திருக்கலாம்!’.

ஊசி போட்டு, மருந்து கொடுத்த டாக்டர் ”எதுக்கும் உன்னை கடிச்ச எலி மேல ஒரு கண் வெச்சுக்கோ” என்று சொல்லி அனுப்பினதுனால வீட்டுல இருக்குற எல்லா சந்து பொந்துலேயும் தன்னோட தலையை விட்டு எலியை தொடர்ந்து கண்காணிச்சிக்கிட்டு இருக்காராம்.

”எலிக்கு என்ன ஆச்சு, அந்த அலுவலக நண்பருக்கு அடுத்தது என்ன ஆகும்?” என்ற எதிர்பார்ப்புகளுடன் நான் காத்திருக்கிறேன். நீங்களும் காத்திருக்கமாட்டீங்களா என்ன?