திங்கள், 30 ஏப்ரல், 2012

"என் செல்ல செல்வங்கள்"- வாசிப்பனுபவம்


ச்சிண்டு, டைகர், ஜிம்மி, தத்தி, நூரி, வெள்ளைச்சி, லலிதா பவார், வெள்ளையப்பா, ச்செல்ல மியாவ், கறுப்பு துரை, சோஃபியா, சடைச்சு, நொண்டி, ப்ரவுணு, ஸ்கேம்பி, ஜிஞ்சர், குரங்கணா, கற்பகம் [எ] கப்பு, சதாம், மணி, வரது, ஷிவா, கோபால கிருஷ்ணன் [எ] ஜிகே 009! 

”என்னய்யா இதெல்லாம்?” என்று கேட்பவர்களுக்கு – இவையெல்லாம், தான் வளர்த்த நாய், பூனை செல்லங்களுக்கு புத்தக ஆசிரியர் வைத்த பெயர்கள் தான். சரி செல்லங்களுக்குத் தான் இப்படி பெயர் வைக்கிறாங்கன்னு பார்த்தா பழகிய சில மனிதர்களுக்கும் பெயர் வைத்திருக்கிறார்கள் இப்படி - இந்திரா காந்தி [தான் சொல்றது தான் சரி என்று சொல்லும் ஒரு பெண்ணுக்கு], குல்மால்! [எதற்கும் இந்த வார்த்தை பயன்படுத்தும் ஒரு ஆணுக்கு!].

ஆரம்பத்திலேயே உங்களை உள்ளே அழைப்பது ஜிகே 009. எப்படி தெரியுமா?

”கிருஷ்ணன்…  கோபால கிருஷ்ணன் 009.
 
கை நீட்டுனா ஏன் யாருமே கை குலுக்க மாட்டேங்கறீங்க?
  
அதெல்லாம் நகத்தை உள்ளே இழுத்துக்குவேன். கவலையே படாதீங்க. ஒரு வேளைக் கடிச்சுருவேனோன்னு பயமா? அதுக்கும் வழி இல்லை. பல்லெல்லாம் கொட்டிப் போச்சு. உடம்பு பூராவும் சர்க்கரை இருக்காம். இப்போப் புரியுதா ஏன் இவ்வளவு இனிப்பாப் பேசறேன்னு?

உள்ளே வாங்களேன்…. உட்கார்ந்து பேசலாம்!”


ஹௌ ஸ்வீட்!... எவ்வளவு பாசமா கூப்பிடறான் பாருங்க! உள்ளே போனீங்கன்னா நிச்சயம் சந்தோஷமா இருப்பீங்க. அதுக்கு நான் உத்திரவாதம். அது சரி எங்கே போகங்கறீங்களா? அட... நம்ம துளசி கோபால் டீச்சர் எழுதிய “என் செல்ல செல்வங்கள்” புத்தகத்துக்கு உள்ளேதாங்க!

அப்படிப் போனா, நாய், பூனை போன்ற பிராணிகள் மேல் அவர் வைத்திருக்கும் பாசம், அவை காட்டும் அன்பு, வளர்ப்பில் உள்ள பிரச்சனைகள், வெளிநாடுகளில் இது போன்ற செல்லப் பிராணிகளுக்குக் கிடைக்கும் விதவிதமான உணவு வகைகள், கிடைக்கும் உபகரணங்கள், பூனையை “ஃபிக்ஸ்” செய்வது, செல்லங்களுக்கு உடம்பு சரியில்லையெனில் அவற்றை மிருக வைத்தியரிடம் கூட்டிச் செல்ல என்ன செய்ய வேண்டும், என பல விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு செல்லப் பிராணியை வளர்த்து விட்டு அதனிடமிருந்து பிரிவது என்பது எவ்வளவு துயரமானது! அதுவும் உடல் வேதனையோடு அப்பிராணி துடிக்கும்போது கருணையோடு அதனை ஊசி போட்டு அமைதிப்படுத்த முடிவு எடுப்பது அதைவிடத்  துயரமானது. இந்தத் துயரையும் இவர் அனுபவித்திருக்கிறார். கப்புவும், ஜிகேவும் அடைந்த முடிவு, படிக்கும் போது நிச்சயம் நம் மனதை பாதிக்கும்.

புத்தகத்தினை எடுத்ததிலிருந்து கீழே வைக்க மனசில்லாது ஒரே நாளில் படித்து முடித்தேன். சாதாரணமாக மிருகங்கள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களுக்குக் கூட இந்தப் புத்தகத்தினைப் படித்தால் வீட்டில் ஒரு செல்லப் பிராணி வளர்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்து விடும்! அது தானே புத்தகத்தினை எழுதியவருக்கு வெற்றி!

நான் கல்லூரியில் படித்த காலத்தில் ஒரு நண்பர் வீட்டிற்குச் செல்வதுண்டு. அவர் வீட்டில் நிறைய பூனைகள் சுதந்திரமாய்ச் சுற்றிக்கொண்டிருக்கும். நண்பரும் அவரது தாயும் அவற்றைக் கையில் எடுத்துக் கொஞ்சுவார்கள். எல்லாப் பூனைகளுக்கும் பெயர் வைத்துவிடுவார் அவரது அம்மா! ஒரு பூனைக் குட்டியின் பெயர் ”திரிப்பு!” – மைக்கேல் மதன காம ராஜன் வெளி வந்த நேரத்தில் பிறந்த பூனை – அதனால் திரிபுரசுந்தரி என்று பெயரிட்டு, செல்லமாய் ‘திரிப்பு!’ என்று கூப்பிடுவார்கள். என் செல்ல செல்வங்கள் படித்தபோது ’திரிப்பு’-வும், சக்குபாயும், ஷாலினியும் நினைவுக்கு வந்தனர்.

கூடவே பிராணிகளுக்கு மனிதர்கள் மேல் இருக்கும் பாசம் அளவிடமுடியாதது. என் பெரியப்பா வீட்டில் [திருப்பராய்த்துறை] தினந்தினம் இரவில் உணவு உண்ண வருவான் கருப்பன். பெரியப்பா இறந்த போது வெளியில் நின்று கண்ணீர் வடித்தான். காவேரி ஆற்றங்கரையோரம் சிதையூட்ட எடுத்துச் சென்றபோது கூடவே வந்து நின்று கொண்டிருந்துவிட்டு, காவேரியில் நீராடிய பின் தான் சென்றான் கருப்பன்! இதையெல்லாம் அவனுக்கு யார் சொல்லிக் கொடுத்திருக்க முடியும்!



”நீங்கள் பிராணிகளை நேசிப்பவர்களா?”, அப்படியெனில் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குப் பிடிக்கும். இது வரை பிராணிகளை நேசிக்காதவர் எனில் இப்புத்தகத்தினைப் படித்தால் கண்டிப்பாய் நேசிக்கத் தொடங்குவீர்கள்! புத்தகத்தினை சந்தியா பதிப்பகத்தார் அழகாய் வெளியிட்டு இருக்கிறார்கள். விலை ரூபாய் 80 மட்டுமே!

முகவரி: 

சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53 - வது தெரு
9 - வது அவென்யூ
அகோக் நகர்,
சென்னை – 600083
தொலைபேசி – 044 24896979
மின்னஞ்சல்: sandhyapublications@yahoo.com
இணைய முகவரி: www.sandhyapublications.com

மீண்டும் சந்திப்போம்,

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.




வியாழன், 26 ஏப்ரல், 2012

அடர் பனியும் அதன் விளைவுகளும்



[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 1]


சில மாதங்களுக்கு முன் ”மத்தியப் பிரதேசம் அழைக்கிறது” என்ற தலைப்பில் நான் அங்கு உள்ள குவாலியர், ஷிவ்புரி, ஓர்ச்சா மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ஜான்சி போன்ற இடங்களுக்குச் சென்று வந்ததைப் பற்றிய பயணக் குறிப்புகளை 27 பகுதிகளாக எழுதியது எனது வலைப்பூவினைத் தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். 

அதை முடிக்கும் போது சீக்கிரமே இன்னுமொரு பயணத் தொடரினை ஆரம்பிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.  இந்தத் தொடரிலிருந்து உங்களை மீண்டும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன்.  கூடவே வருவீர்கள் தானே?

இம் முறை நான் சென்றது ஜபல்பூர் மற்றும் பா[B]ந்தவ்கர் என்ற இரண்டு இடங்களுக்கு. அலுவலகப் பணிகளுக்கென ஒரு மாதம் பயிற்சி வகுப்புகள் இருந்தது. அதன் நடுவில் நான்கு நாட்கள் நேரடியாக சில கிராமங்களுக்குச் சென்று நலத்திட்டங்கள் எப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவும், இந்திய தேசத்தின் இயற்கை மற்றும் வனங்களின் வளத்தை பார்க்கவும் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

11-ஆம் தேதி [ஜனவரி] அன்று மாலை 04.00 மணிக்கு தில்லியின் ‘ஹஸ்ரத் நிசாமுதீன்” ரயில் நிலையத்திலிருந்து ஜபல்பூர் வரை செல்லும் ‘மஹா கௌஷல்’ விரைவு வண்டியில் நாங்கள் அனைவரும் [மொத்தம் 35 பேர்] செல்ல முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ரயில் நிலையம் செல்வதற்கு முன் மதியம் சுமார் 02.30 மணிக்கு தொலைபேசியில் ரயில் சரியான நேரத்திற்குக் கிளம்புகிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள அழைத்தபோது இரவு 09.00 மணிக்குத் தான் கிளம்பும் என்றார்கள். [கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னைப் பயணத்தின் போதும் இப்படித்தான் நீண்ட நேரம் கழித்தே கிளம்பியது…  நமக்கு அப்படி ஒரு ராசி!] அதன் பிறகு அப்படியே தள்ளிப் போடப்பட்டு 11.00 மணிக்குத்தான் கிளம்பும் எனத் தெரிந்தது.

தில்லி மற்றும் வட இந்திய நகரங்களில் பெரும்பாலும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இருக்கும் அடர்பனியும், பனிமூட்டமும் விமான, ரயில் போக்குவரத்தினை ரொம்பவே பாதிக்கும். எத்தனை விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டாலும்  இயற்கையின் முன் நாம் எல்லோரும் தோற்றே விடுகிறோமோ என்று எனக்கு அவ்வப்போது தோன்றும். அது உண்மைதான் என்று நினைக்கும்படி செய்தது அன்றைய நிகழ்வு.

மாற்றப்பட்ட பயண நேரம் நிறைய விஷயங்களை மாற்றியது. வகுப்பிலிருந்தே நேராக ரயில் நிலையம் செல்ல வேண்டுமென காலையிலேயே பெட்டியுடன் எல்லோரும் வகுப்புக்குச் சென்றோம். நேரம் மாறியதால் திரும்பவும் வீட்டிற்கு வந்து இரவு மீண்டும் கிளம்பி ரயில் நிலையம் சென்றேன். சற்றேறக் குறைய எட்டு மணி நேரம் தாமதமாகக் கிளம்பியதால் நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு நல்ல விஷயமும் இருந்தது. 

அது என்ன நல்ல விஷயம் என்று கடைசியில் சொல்கிறேன்…  :) இந்தப் பயணத்தின் போது நான் எடுத்த சில புகைப்படங்களை கீழே கொடுத்துள்ளேன் ஒரு முன்னோட்டமாக…








என்ன புகைப்படங்களைப் பார்த்து ரசித்தீர்களா? நன்றி. அதெல்லாம் சரி அந்த நல்ல விஷயம் என்ன என்பதை மேலும் காலம் தாழ்த்தாது சொல்லி விடுகிறேன். எங்கள் அனைவருக்குமே 3-AC-இல் தான் முன்பதிவு செய்து வைத்திருந்தார்கள். நேரம் கடந்து வண்டி புறப்பட்டதாலோ என்னவோ, முன்பதிவு செய்த நிறைய பேர் தங்களது பயணத்தினை இரத்து செய்துவிட்டதால் என்னுடைய பயணச்சீட்டினைச் சேர்த்து 8 பேர்களுடைய பயணச்சீட்டு 2-AC – க்கு மேம்படுத்தப்பட்டது.

பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது “Do you want to be upgraded?” என்று கேட்டு ஒரு வரி இருக்கும். ஒவ்வொரு முறையும் அதை TICK செய்தாலும் இதுவரை நடந்ததே இல்லை…  :( 

ஆனால் இம் முறை மேம்படுத்தப்பட்டதால், 2-AC-இல் நானும் மற்ற 7 நபர்களும் பயணம் செய்தோம். சுகமான பயணம்.  மத்தியப் பிரதேச சுற்றுலா துறையினர் தான் இந்தப் பயணத்தினை ஏற்பாடு செய்தார்கள். சென்ற பயணத்தின் போது எங்களுடன் வந்த திரு ரோஹித் பட்நாகர் அவர்களே இந்த முறையும் வந்தார். பயணத்தின் போது வேளாவேளைக்கு தேவையான உணவு, தண்ணீர், தேநீர் என எல்லாவற்றிற்கும் முன்னேற்பாடு செய்திருந்தார். நல்ல படியாக பயணம் முடிந்து 12-ஆம் தேதி மாலை 07.00 மணி அளவில் ஜபல்பூர் சென்றடைந்தோம். 2-AC-இல் பயணம் செய்தாலும் பயண முடிவில் ஒரு விஷயம் நடந்தது! அது...

அடுத்த பகுதியில்...

மீண்டும் சந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


பின்குறிப்பு-1: 20.04.2012 வெள்ளி அன்று வல்லமையில் வெளிவந்தது.


பின்குறிப்பு-2இது எனது 250-வது பதிவு. இத்தனை பதிவுகளுக்கும் வருகை புரிந்து, கருத்தளித்து, என்னை தொடர்ந்து ஆதரிக்கும் வலையுலக நட்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!



திங்கள், 23 ஏப்ரல், 2012

விகடன் வலையோசையில் - என் வலைப்பூ

அன்புள்ள வலையுலக நண்பர்களுக்கு,

எனது வலைப்பூவினை சென்ற வார [18.04.2012] ஆனந்த விகடன் - “என் விகடன்” [புதுச்சேரி] புத்தகத்தில் வலையோசை பகுதியில் அறிமுகம் செய்து எனது வலைப்பூவிலிருந்து இரண்டு இடுகைகளையும் பிரசுரித்திருக்கிறார்கள்.


உங்களுடன் இந்த இனிய செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி.

கீழே அந்த பக்கத்தினை போட்டு இருக்கிறேன்.


மீண்டும் சந்திப்போம்...



நட்புடன்



வெங்கட்.
புது தில்லி.


ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

அப்பா...





”எத்தனை தடவை ஒரே கேள்வியைக் கேப்பீங்க? கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா?” என வயதான அப்பாவைப் பார்த்து நீங்கள் கேட்டதுண்டா? அப்ப இந்த காணொளியைப் பாருங்க! [சிலர் முன்பே இந்த காணொளியைப் பார்த்திருக்க முடியும்! ரிஷபன் சாருடைய வலைப்பூவில்.]




தன்னுடைய மகனின் கனவினை/ஆசையைத் தீர்த்து வைக்க, ஒரு அப்பா என்னவெல்லாம் செய்வார் என உங்களால் உணர முடியுமா? பாருங்களேன் இந்த காணொளியை!


”சரி இன்னிக்கு எதுக்கு இப்படி அப்பா பற்றிய காணொளிகள் போடறீங்க?” என்ற கேள்விக்கு பதில்....

இன்று எனது அப்பாவிற்கு 74-ஆவது பிறந்த நாள். தனது குழந்தைகளின் நலனுக்காக தன்னுடைய பல கனவுகளை மண் தோண்டி புதைத்துவிட்டு குழந்தைகளுக்காகவே தனது வாழ்நாளினைக் கழித்த அப்பாவுக்கு, நீண்ட ஆயுளையும் மன மகிழ்ச்சியையும் எல்லாம் வல்லவன் அளிக்கட்டும்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா!

வெங்கட்
புது தில்லி


புதன், 18 ஏப்ரல், 2012

வல்லவனுக்கு கேரட்டும் புல்லாங்குழல்….


நம்ம காய்கறி வாங்க மார்க்கெட் போனா பல காய்கறி வாங்கிட்டு வருவோம். வீட்டுக்கு வந்து அதை வைத்து சமையல் செய்வோம் இல்லைன்னா பச்சையா சாப்பிடுவோம். ஆனா இவங்களைப் பாருங்க காய்கறிகளை வைத்து அற்புதமான இசை தருகிறார்கள்.

The Vegetable Orchestra என்பது வியன்னாவில் இருக்கும் ஒரு இசைக்குழு. 1998 – ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த குழு இதுவரை மூன்று இசை ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

திரு ஆர்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வலைப்பூவில் இந்தக் குழுவினரின் ஒரு காணொளி பார்த்தவுடன் இணையத்தில் இவர்களைப் பற்றிய விவரங்களைத் தேடினேன். இவர்களைப் போலவே நிறைய குழுவினர் இப்போது காய்கறிகளை வைத்து இசை விருந்து தருகிறார்கள். நான் பார்த்ததை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளவே இப்பகிர்வு.

இந்த வித்தியாசமான இசையைக் கேட்டு இன்புறுங்கள்.


மற்றுமொரு காணொளி உங்கள் பார்வைக்கு!


என்ன நண்பர்களே வித்தியாசமான இசையை ரசித்தீர்களா?

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



வெள்ளி, 13 ஏப்ரல், 2012

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்



அறுசுவையும் கலந்த மாங்காய் பச்சடி எடுத்துக்கொள்ளுங்கள்......




அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நந்தன வருடம் நல்லவற்றை அள்ளி அள்ளித் தரட்டும்.


நட்புடன்

வெங்கட்
ஆதி வெங்கட்
ரோஷ்ணி வெங்கட்

புது தில்லி


செவ்வாய், 10 ஏப்ரல், 2012

வித்தியாசமான ஒரு ஆட்டோ


சென்னையோ, தில்லியோ எந்த ஊராக இருந்தாலும் சரி, நிறைய ஆட்டோக்களை நாம் இப்போது பார்க்கிறோம். சிறிய தூரங்களைக் கடக்க அதனை பயன்படுத்தவும் செய்கிறோம். பெரும்பாலும் இந்த ஆட்டோ பயணங்களில் நமக்குக் கிடைப்பது கசப்பான அனுபவங்களே. ஆனால் மும்பையில் தனக்குக் கிடைத்த சுகமான அனுபவத்தினைப் பற்றி முகப்புத்தகத்தில் ஒருவர் பகிர்ந்திருக்கிறார். அதன் தமிழாக்கம் கீழே.


ஒரு ஞாயிறு அன்று நானும், எனது மனைவி மற்றும் மகனுடன் அந்தேரியிலிருந்து பாந்த்ரா செல்ல ஒரு ஆட்டோவினை நிறுத்தினோம், இது ஒரு வித்தியாசமான பயணமாக இருக்கப் போகிறது என்பதை அறியாமலே.
நிறுத்திய ஆட்டோவில் உள்ளே நுழைந்து அமர்ந்ததும் எதிரே ஒரு சிறிய தொலைக்காட்சிப் பெட்டி. அதில் தூர்தர்ஷன் ஓடிக்கொண்டிருந்தது. நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டோம். பக்கத்தில் ஒரு முதலுதவிப் பெட்டி. பஞ்சு, டெட்டால் மற்றும் சில மாத்திரைகளும். நிச்சயம் இது வித்தியாசாமான ஒரு ஆட்டோ எனப் புரிந்தது.


சுற்று முற்றிலும் பார்த்தேன். மேலும் இருந்தவை: ரேடியோ, தீயணைப்பு சாதனங்கள், நேரம் காட்டி, நாள்காட்டி, எல்லா மதக்கடவுள்களின் படங்கள். இவை மட்டுமா, பம்பாய் ஹீரோக்கள், காம்தே, சாலாஸ்கர், கர்கரே மற்றும் உன்னிகிருஷ்ணன் அவர்களுடைய புகைப்படங்களும் இருந்தன.

ஆட்டோ மட்டுமல்ல, ஆட்டோ ஓட்டுனரும் வித்தியாசமானவராகத் தான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அவருடன் பேச்சுக் கொடுத்தேன். அவர் பணி புரிந்து கொண்டிருந்த அலுவலகம் மூடியபின் கடந்த 8-9 வருடங்களாக ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருப்பதாகச் சொன்னார்.

பள்ளி செல்லும் இரு குழந்தைகளுக்குத் தகப்பன் இவர். காலை 8 முதல் இரவு 10 மணி வரை ஆட்டோவையும் தனது வாழ்க்கையையும் திறம்பட ஓட்டும் இவர் சொன்னது, “சார், வீட்டுல உட்கார்ந்து டி.வி. பார்ப்பதால் என்னைப் போன்றவர்களுக்கு பெரிதாக என்ன பயன் வந்துடப் போவுது? நாலு காசு சம்பாதித்தா எதிர்காலத்துக்குப் பயன்படுமே!" உண்மைதானே!

இது மட்டுமில்லாமல், தன்னிடம் எப்போதெல்லாம் சற்று அதிகமாக பணம் சேர்கிறதோ, அப்போதெல்லாம், அந்தேரியில் இருக்கும், வயதான பெண்களுக்கான ஒரு இல்லத்தில் இருக்கும் பெண்களுக்கு, பல் துலக்கி, பற்பசை, சோப், எண்ணெய் என தேவைப்படும் பொருட்களை வாங்கித் தருகிறாராம். ஆட்டோவில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவீதம் தள்ளுபடியும், பார்வை இல்லாத நபர்களுக்கு 50 ரூபாய் வரையான தொலைவெனில் இலவசமாகவும் அழைத்துச் செல்வாராம்.

இப்படி ஒவ்வொன்றும் தெரிந்துகொண்ட நானும், எனது மனைவியும் 45 நிமிட பயணம் முடிந்தபோது ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த மகிழ்ச்சியுடன் விடை பெற்றோம்.


நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய நபர்தான் சந்தீப் பச்சே என்ற இந்த ஆட்டோ ஓட்டுனர். மும்பையில் அவர் ஓட்டும் ஆட்டோ எண். MH-02-Z-8508. 

ஒரு நல்ல மனிதரைப் பற்றித் தெரிய வந்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

மீண்டும் சந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

ஞாழல் மலர் – காதலியுடன் நீண்ட பயணம்


[பட உதவி: கூகிள்]

பயணம் என்பது எல்லோருக்கும் பிடிக்கும் என என்னுடைய முந்தைய பதிவு ஒன்றில் எழுதியிருந்தேன். அதுவே அந்த பயணம் மனதுக்குகந்த காதலியுடன் என்றால் இன்னும் ரம்யமாய் இருக்கும் அல்லவா! அந்த அனுபவம் நிச்சயம் சுகமாய்த் தான் இருக்கும்!

பத்துப்பாட்டு எனச் சொல்லப்படும் பாடல்களில் குறிஞ்சிப் பாட்டு என்ற ஒன்றும் உண்டு. இந்த குறிஞ்சிப் பாட்டு பற்றி திரு என். சொக்கன் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றிலிருந்து சில வரிகளை உங்களுக்குத் தருகிறேன்.
குறிஞ்சிப் பாட்டு 'காதலன், காதலியின் நீண்ட பயணம் ஒன்றைச் சொல்வது. எழுதியவர் கபிலர். இதில் 61 - வது வரியில் தொடங்கி, 95 - வது வரிவரையிலான பகுதியில், அந்தக் காலப் பூக்களின் விரிவான பட்டியல் வருகிறது:
உள்ளகம் சிவந்த கண்ணேம் வள்இதழ்ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,செங்கோடு வேரி, தேமா, மனிச்சிகை,உரீஇநாறு அவிழ்தொத்து உங்தூழ், கூவிளம்,எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,வடவனம், வாகை, வான்பூங்குடகம்,எருவை, செருவிளை, மணிப்பூங்குடசம்,பயினி, வானி, பல்இனர்க் குரவம்,பசும்பிடி, வகுளம், பல்இணர்க் காயா,விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,குருசிலை, மருதம், விரிபூங்கோங்கம்,போங்கம், திலகம், தேங்கமல் பாதிரி,செருத்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,தில்லை, பாலை, கல்இவர் முல்லை,குல்லை, பிடவம், சிறுமாரோடம்,வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,தாழை, தளவம், முள்தாட் தாமரை,ஞாழல், மௌவல், நறுந்தாண் கொகுடி,சேடல், செம்மல், சிறுசெங்குழலி,கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,காஞ்சி, பனிக்குலைக் கள்கமழ் நெய்தல்,பாங்கர், மாரவும், பல்பூந் தணக்கம்,ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,தும்பை, துழாஅய், சுடர்பூந் தொன்றி,நந்தி, நறவம், நறும் புன்னாகம்,பாரம், பீரம், பைங்குருங்கத்தி,ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,மாஇருங்குருத்தும், வேங்கையும்,. பிறவும் ....

இத்தனை பூக்களையும் பார்த்து மயங்கி, அவற்றை ஆசையாகப் பறித்து, மழை கழுவித் தூய்மையாக்கிய பாறையில் குவிப்பதாகக் காட்சி. கபிலரின் இந்தப் பாட்டைப் படித்துவிட்டு, இத்தனை பூக்களையும் எனக்குப் பறித்துத் தந்தால்தான் ஆச்சு என்று அந்தக் காலத்துக் காதலியர், தங்கள் காதலர்களைப் பாடாகப் படுத்தியிருப்பார்களோ, என்னவோ! பாவம்!

காதலிகள் காதலர்களைப் பாடாய் படுத்துவார்களா என்ன? அப்படிப் படுத்தினாலும் அதை ரசிப்பார்களே காதலர்கள்! ”என்ன அனுபவமா?” என்று கேட்டு விடாதீர்கள்! எனக்கு அந்த ராசி இல்லை! அதற்காகத் தான் கல்யாணம் ஆன பிறகு காதலிக்கத் தொடங்கினேன் – [யாருப்பா அதுக்குள்ள போட்டுக் கொடுக்கப் பார்க்கிறது?] நான் காதலிக்கத் தொடங்கினேன் எனச் சொன்னது என் மனைவியைத் தான்!

சரி விஷயத்துக்கு வருகிறேன், வலைச்சரத்தில் ஆசிரியர் பணி தொடங்கி இன்றோடு ஏழு நாள் முடிகிறது. இன்றைய எனது பதிவாக, வலைச்சரத்தில் ”ஞாழல் பூ –அனுபவச் சரம்” தொடுத்திருக்கிறேன். அனைவரும் வலைச்சரத்திற்கும் வந்து படித்து கருத்துரைக்க வேண்டுகிறேன்.

இந்த வாரம் முழுவதும் எனது பக்கத்திற்கும், வலைச்சரத்திற்கும் வந்து நான் தொடுத்த மலர்ச் சரங்களைப் படித்து எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நாளை முதல் வழக்கம் போல, அவ்வப்போது சில பதிவுகள் எனது வலைப்பக்கத்தில் வெளிவரும்.

மீண்டும் நன்றிகூறி நட்புடன் விடைபெறுவது….

வெங்கட்
புது தில்லி.

சனி, 7 ஏப்ரல், 2012

காந்தள் மலர் விரலுக்குச் சொந்தக்காரி!



காந்தள் மலரின் சில சிறப்புகள் கீழே.

காந்தள் மலர் – இது தமிழகத்தின் தேசிய மலர்.

காந்தள் மலர் – குறிஞ்சி நில தெய்வமான முருகப்பெருமானுக்கு உகந்த மலர் இது. ஆறுமுகனுக்கு உகந்த இந்த மலருக்கும் ஆறு இதழ்கள்!

ஒரு இனிமையான நளவெண்பா பாடல்:

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் செங்கையால்
காத்தாள்; அக் கைம்மலரைக் காந்தெளனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காண்!

ஒரு பூந்தோட்டத்தில் அழகிய பெண்ணொருத்தி, பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கிறாள். “பூக்களைப் பறிக்காதீர்கள்” என்று அந்தக் காலத்தில் எழுதி வைக்கவில்லை போலும். அப்படிப் பறித்துக் கொண்டு இருக்கும் அழகியின் முகம் செந்தாமரை மலர் போல இருக்கிறதே என்றெண்ணி அவளது வதனத்தை மொய்த்ததாம் வண்டுகள். உடனே அவள், தனது சந்திர பிம்ப வதனத்தினை வண்டுகள் கடித்து விடப் போகிறதே என தனது செந்நிறமான கையால் தடுக்க, அந்த கை விரல்களைப் பார்த்ததும், காந்தள் மலர் போல இருக்கிறதே என்றெண்ணி விரல்களை மொய்க்க ஆரம்பித்து விட்டதாம்! என்னே ஒரு கற்பனை!

என்ன நண்பர்களே காந்தள் மலர் பற்றிய குறிப்பினைப் படித்து ரசித்தீர்களா! இந்த இனிய காந்தள் மலர் போலவே இன்றைய வலைச்சரத்தில் சில சுவையான பதிவுகளை அறிமுகம் செய்திருக்கிறேன். இன்றைய பகிர்வுகள் விழிப்புணர்வினைச் சொல்லும் பகிர்வுகள்.

வலைச்சரத்திற்கு வந்து இன்றைய மலரான காந்தள் மலரின் அழகினை ரசிக்கலாமே!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

மணக்கும் மனோரஞ்சிதம்….


[பட உதவி: கூகிள்]

மல்லிகைப் பூ என்றால் தினசரி பார்க்கலாம். மனோரஞ்சிதம் அப்படியில்லை.   பச்சை நிறத்தில், இலை போன்று தோற்றமளித்தாலும், மனதை சந்தோஷப்படுத்தும் மணம் கொண்டது மனோரஞ்சிதம்.  பூவை முகர்ந்து பார்த்தால், நாம் என்ன மணத்தினை மனதில் நினைக்கிறோமோ அதே மணத்தினைத் தரவல்லது மனோரஞ்சிதம் பூ. 

அதுபோலவே நம் மனதிற்குத் தான் எத்தனை சக்தி.  நினைத்த நேரத்தில் நினைத்த பொருளை மனக்கண்ணில் தெரிய வைக்கிறது மனது.  ”நேற்று ஒரு பூந்தோட்டத்திற்குச் சென்றோமே அங்கே எத்தனை எத்தனை மலர்கள், அவற்றின் அழகு, வசீகரம் ஆகியவற்றை நினைத்தால் மனதில் நமக்கு அதன் உருவம் தெரிகிறது.  இருந்தாலும் அவற்றை மீண்டும் கண் கொண்டு பார்க்கவேண்டுமானால் அப் பூந்தோட்டத்திற்குத் திரும்பச் செல்ல வேண்டும், அப்பூக்களை நீங்கள் புகைப்படம் எடுத்திராவிட்டால்!

உங்கள் வீட்டில் நிகழும் விழாக்கள் எல்லாவற்றிலும் புகைப்படங்கள் எடுத்து, அதை ஒரு அழகிய ஆல்பத்தில் போட்டு அவ்வப்போது எடுத்துப் பார்த்து அந்த நாளில் நடந்த நிகழ்வுகளை மனதுக்குள் நினைத்து ரசிக்க புகைப்படங்கள் தானே உங்களுக்கு உதவியாக இருக்கின்றன.  [பலர் கல்யாண ஆல்பம் பார்த்து மனதுக்குள் அழுவது வேறு விஷயம்! அதை எதுக்கு இங்கே நினைவு படுத்தணும்?]

புகைப்படங்கள் எடுப்பது எனக்கு பொழுதுபோக்கு. அவ்வப்போது பயணம் செல்லும்போது மறக்காமல் எடுத்து வைப்பது எனது டிஜிட்டல் காமிராவை – அப்போது தானே நிறைய புகைப்படங்களை எடுத்து அவற்றை வலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.  நான் எடுத்த சில புகைப்படங்கள் கீழே.


ரோஜா... ரோஜா....  


ஜெய்விலாஸ் பேலஸ், குவாலியர்.


மருமகள் கோவில், குவாலியர்


நாங்களும் சர்க்கஸ் காட்டுவோமில்ல.... தில்லி விலங்கியல் பூங்கா 


பேடாகாட், ஜபல்பூர்

புகைப்படக்கலை என்பது மிகவும் செலவு வைக்கும் ஒரு விஷயம் என்பதால் முன்பெல்லாம் பலர் இதில் அவ்வளவாக விருப்பம் காட்டியதில்லை. இப்போது டிஜிட்டல் காமிராக்களால் அதிக தொடர் செலவு இல்லை என்பதால் நிறைய பேருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இன்று வலைச்சரத்தில் புகைப்படங்கள் பற்றிய வலைப்பூக்களை பார்க்கலாம்.  இன்றைய வலைச்சரத்தில் மனோரஞ்சிதம் மணம் வீசுகிறது.  நுகர்ந்து மகிழுங்கள்….

மீண்டும் நாளை சந்திப்போம் வேறொரு மலரோடு!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

வியாழன், 5 ஏப்ரல், 2012

தாழம் பூவே வாசம் வீசு….



தாழம்பூ என்றால் உடனே என் நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாறுபட்ட ஒரு வேடத்தில் நடித்த “கை கொடுக்கும் கை” படத்தில் வரும் “தாழம்பூவே வாசம் வீசு! தாயின் தாயே கொஞ்சிப் பேசு!” என்ற இனிய பாடல் தான். இன்றைய பகிர்வினை இந்த இனிய பாடலுடன் ஆரம்பிப்போமே!


என்ன நண்பர்களே இனிமையான தாழம்பூ பாடலைப் பார்த்து ரசித்தீர்களா? இனி விஷயத்திற்கு வருகிறேன்.

இன்றைய வலைச்சரத்தில் நான் தொடுத்திருப்பது தாழம்பூ. இந்தத் தாழம்பூவை சிவபெருமானுக்கு பூஜை செய்யப் பயன்படுத்துவதில்லை.  ஏன் என்றால் அதற்கு ஒரு கதை இருக்கிறது! 

படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய  திருமாலும்  இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.
திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அது மகா சிவராத்திரி நாளாகும். [நன்றி விக்கிப்பீடியா!]

என்ன கதை படிச்சீங்களா? நல்லா இருந்ததா?

இயற்கை அன்னை எத்தனை எத்தனை வியப்பான விஷயங்களை நமக்குத் தந்திருக்கிறாள். மரங்கள், செடி-கொடிகள், விலங்குகள், பறவைகள், நீர் நிலைகள் என அள்ளி அள்ளித் தந்திருக்கிறாள். நெய்வேலி நகரில் மா, பலா, புளி, முழு நெல்லிக்காய், அறி நெல்லிக்காய், வேம்பு, கல்யாணமுருங்கை, முருங்கை, எலுமிச்சை, வாழை என விதம் விதமாய் மரங்கள் சூழ வாழ்ந்து மரங்களின் அருமையை உணர்ந்தவன்.

இயற்கையைப் போற்றும் பதிவுகள் தமிழில் எழுதுபவர்கள் மிகக் குறைவுதானோ!  அப்படி எழுதுபவர்களும் அவ்வப்போது தான் எழுதுகிறார்கள்.  அப்படிப் பட்ட இயற்கை பற்றிய பகிர்வுகளை, இன்றைய வலைச்சரத்தில் தாழம்பூ சரமாகத் தொடுத்திருக்கிறேன். 

வந்து பார்த்து இயற்கையை ரசியுங்களேன் நண்பர்களே.

மீண்டும் நாளை சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.