வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

ஃப்ரூட் சாலட் – 82 – இலவசப் பயணம் – தமிழமுது - பெருங்காயம்



இந்த வார செய்திகள்:



கடந்த திங்கள் கிழமை அன்று கொல்கத்தா நகரில் பத்தாவது படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு சந்தோஷ அதிர்ச்சி. ஆட்டோ ஓட்டுனர்கள், தங்களது வாகனங்களின் பின்னால் எழுதி வைத்திருந்த விஷயம் தான் அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  பத்தாம் வகுப்பிற்கான தேர்வு எழுதச் செல்லும் மாணவ/மாணவிகளை இலவசமாக தங்களது ஆட்டோரிக்‌ஷாக்களில் தேர்வு எழுதப்போகும் பள்ளி வரை கொண்டு விடுவதாக அவர்கள் செய்த அறிவிப்பு எதிர்பாரா சந்தோஷத்தினை மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் அளித்தது.

தேர்வு எழுதப் போகும் போது இருக்கும் பதட்டமான நிலையில் கொல்கத்தா நகரின் மோசமான போக்குவரத்தினையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லாது நாங்கள் இலவசமாக மாணவ மாணவியர்களை அழைத்துச் செல்லும் திட்டத்தினை ஆளும் கட்சியைச் சார்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் அறிவித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், கொல்கத்தா நகரவாசிகளுக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு பெரிய செய்தியானது. அதில் கிடைத்த அவப் பெயரை மாற்றிக் கொள்ளவும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், இந்த அறிவிப்பு பலராலும் வரவேற்கப் பட்டிருக்கிறது.

வருகின்ற மார்ச் 6-ஆம் தேதி வரை பத்தாவது தேர்வு கொல்கத்தாவில் நடைபெறப் போகிறது. மேலும் மார்ச் மாதம் 12-ஆம் தேதி துவங்கப்போகும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்விற்கும் இந்த இலவச சலுகைகள் தொடரும் என்று அறிவித்திருக்கும் கொல்கத்தா நகர ஆட்டோ ஓட்டுனர்களை பாராட்டுவோம்.

சென்னை வாசிகளுக்குக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கலாம்!  மீட்டர் படி கட்டணம் வாங்கினால் கூட போதும் – இலவசம் கூட வேண்டாம் என்று நிச்சயம் நினைப்பார்கள்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

அன்பை மட்டுமே கடன் கொடுங்கள். அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் – அன்னை தெரசா....

இந்த வார குறுஞ்செய்தி:

A GOOD PLAN EXECUTED NOW IS BETTER THAN A PERFECT PLAN NEXT WEEK – GEN. GEORGE S. PATTON.

ரசித்த படம்:

எத்தனை துல்லியமாக எடுத்திருக்கிறார் இந்த படத்தினை.....



இந்த வார விளம்பரம்:

இந்த வார விளம்பரமாக நீங்கள் படிக்கப் போவது ஒரு பெருங்காய விளம்பரம்! படிச்சுப் பாருங்களேன்!

 
என்ன இது, இந்தப் பேர்ல பெருங்காயம் இருக்கறதே தெரியாதே என்று மலைக்காதீர்கள். இந்த விளம்பரம் வந்தது 1940-ஆம் ஆண்டு! நன்றி ஆனந்த விகடன் தீபாவளி மலர்.

பார்த்த காணொளி:

சமீபத்தில் MTS 3G PLUS NETWORK  விளம்பரம் ஒன்று பார்த்தேன். நீங்களும் பார்த்திருப்பீர்களா எனத் தெரியாது. அதனால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  வருங்காலத்தில் இதுவும் சாத்தியமாகலாம்! 




படித்ததில் பிடித்தது:

தமிழுக்கும் அமுதென்று பேர்....  படித்துப் பாருங்களேன்!



மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

ஆவி எழுதிய கவிதை



ஆவி எழுதிய கவிதையா? என்னது வெங்கட், இப்படி தலைப்பில் பயமுறுத்தறீங்களே? ஏற்கனவே கொஞ்ச நாள் முன்னாடி தான் “தொடர்ந்து வந்த பேய்அப்படின்னு ஒரு பதிவு எழுதி எங்களை பீதியாக்கிட்டீங்க. இப்ப ஆவி கவிதை எழுதுச்சுன்னு சொல்றீங்க. தமிழ் கூறும் நல்லுலகில் கவிஞர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா.  ஆவி வேற கவிதை எழுதி இருப்பதாச் சொல்றீங்க! நாங்கல்லாம் நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா!என்று சிலர் பயப்படுவது தில்லி வரை தெரிகிறது.



அட பயப்படாதீங்க நண்பர்களே! நம்ம சக பதிவர் கோவை ஆனந்த விஜயராகவன் எனும் கோவை ஆவி எழுதி வெளியிட்டு இருக்கும் “ஆவிப்பா பற்றி தான் இன்றைக்குப் பார்க்கப் போகிறோம். சமீபத்தில் தமிழகம் வந்திருந்தேன். சில புத்தகங்களை வாங்கி வைத்திருக்க நம்ம வாத்யார் பால கணேஷிடம் சொன்னேன். அதில் “ஆவிப்பாவும் ஒன்று. தில்லி திரும்பும் முன் சென்னையில் வாத்யாரைச் சந்தித்து அந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.

அட்டையையும் சேர்த்து மொத்தம் 68 பக்கங்கள் – அதில் 11 பக்கங்கள் தவிர்த்து மற்ற 57 பக்கங்களில் நஸ்ரியா நல்லாட்சி புரிகிறார் – இந்த ஆவிப்பாவிற்கும் நஸ்ரியாவிற்கும் என்ன தொடர்பு என சிந்தித்து அட்டையைப் புரட்டினால், “புலி மார்க் சீயக்காய்த் தூளுக்கும் புலிக்கும் எவ்வளவு தொடர்போ அவ்வளவே தொடர்பு நஸ்ரியாவுக்கும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கும்! நஸ்ரியா ஒரு மாடல் மட்டுமே!என்று எழுதி இருக்கிறார்.



மஞ்சுபாஷிணி அவர்களின் அணிந்துரை மிகச் சிறப்பாக ஆவியின் பல கவிதைகளைப் பற்றிச் சொல்கிறது. அவரது அணிந்துரை படிக்கும்போதே பக்கங்களைப் புரட்டி அவர் சிலாகித்த கவிதைகளைப் படிக்கத் தோன்றியது. ஆனாலும் ஒரு சிறப்பான அணிந்துரையை முழுதும் படித்தபின் கவிதைகளைப் படித்தால் இன்னமும் கவிதைகளில் முழுதாகத் திளைக்கலாம் என்று தோன்றியது.

பல கவிதைகள் படிக்கும்போதே முகத்தில் ஒரு புன்சிரிப்பை வரவழைத்தது. உதாரணத்திற்கு ஒன்று கீழே....

கடவுளும் காதலியும்
ஒரு சேர என் முன்னே...
லெட்ஸ் கோ! என்றேன் அவளிடம்
கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்...
என்றேன் அவரிடம்!

அதானே காதலியும் கடவுளும் ஒன்றாக வந்தால் காதலிக்குத் தானே முதலிடம்!

இந்தப் பெண்கள் செல்பேசியில் பேசும்போது கேட்டதுண்டா நீங்கள்? வெகு அருகில் நின்றால் கூட அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்காது. பல சமயங்களில் அலைபேசியில் யாரிடம் பேசுகிறார்களோ அவருக்காவது கேட்குமா எனத் தோன்றும் எனக்கு [நீங்க ஏன் அடுத்தவங்க பேசும்போது கேட்கப் போனீங்க? இருந்தாலும் ராஜா காது கழுதைக் காது பகுதிக்காக இப்படி இருக்ககூடாது என்று சிலர் சொல்வது புரிகிறது!] இங்கே பாருங்களேன் அதை ஆவி அழகிய கவிதையாக எழுதி இருக்கிறார்.

அம்மாவுக்கு பயந்து,
அப்பாவுக்கு தெரியாமல்,
அண்ணனிடம் சண்டையிட்டு,
காற்றுக்கும் எனக்கும் மட்டுமே
கேட்கும் வண்ணம்
மெல்லிய தொனியில்
நீ பேசும் பேச்சுகளை
திருடிக்கொள்கிறதே
இந்த செல்பேசி!

ஒரு படம் – பக்கம் பதினேழு என நினைக்கிறேன் – ஒரு வாகனம் நின்று கொண்டிருக்க, மாடல் நஸ்ரியா காத்திருக்கிறார். அப்பக்கத்தில் இருக்கும் கவிதை.....

கண்ணே,
கலங்காது காத்திரு...
கண்ணிமைக்கும் நேரத்தில்
காற்றாய் வந்து
கவர்வேன் உன்னை...!
காதலொன்றும்
கலிங்கத்துப் பரணியல்லவே?
கஷ்டப்பட்டு சாவதற்கு?

இப்படி பல கவிதைகள் மனதைத் தொட்டன.  இருக்கும் கவிதைகள் அத்தனையும் பிடித்தது என்று இங்கேயே எழுதி விட்டால் நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டாமா? அதனால் நான் ரசித்த இன்னுமோர் கவிதையோடு இங்கே நிறுத்துகிறேன்....



திரிகூடராசப்ப கவிராயனும்
வாயடைத்துப் போவான்....
என் குற்றாலமே நீ
துள்ளியோடி வரும்போது!



இப்படி இருக்கும் அத்தனை கவிதைகளுமே மிக அருமையாக வந்திருக்கின்றன. ஒரு கவிதையில் மட்டும் காதலை மீறி காமம் [மழையில் நனைவது பிடிக்குமென்றாய் எனக்கும்தான்.... நீ நனைவது] இருப்பதாய்த் தோன்றியது!

ஒவ்வொரு பக்கத்தினையும் வண்ணமயமாகவே அச்சடித்து படிப்பவர்களின் கைகளில் ஒரு புகைப்படக் கோப்பாக தவழ வைத்திருக்கிறார் கோவை ஆவி. மிகச் சிறப்பான நூலழகு செய்திருப்பவர் நமது பதிவுலக வாத்யாரான பால கணேஷ். வெளியிட்டோர்கள் விவரம் கீழே:



இந்திரா ப்ரியதர்ஷினி பப்ளிகேஷன்ஸ்,
ஆச்சிப்பட்டி, பொள்ளாச்சி.
தொடர்பு எண்: 89033 30055.
பக்கங்கள்: 64
விலை: ரூபாய் 100 மட்டுமே.

சமர்ப்பணம்

“என் முதலாம்....
இரண்டாம்....
மற்றும்
எல்லாக் காதலிகளுக்கும்

என்று அச்சடித்த பக்கத்தில்

“புன்னகைகளுடன்,
கோவை ஆவி

என்று கையெழுத்திட்டு கொடுத்த நூலாசிரியர் கோவை ஆவி அவர்களுக்கு நன்றி [இப்பல்லாம் அலைபேசி இருக்கோ இல்லையோ இவர் கையில் நிச்சயம் பேனா இருக்கிறது!]


கோவை ஆவி

கவிதை பிடித்தவர்களுக்கு மட்டுமல்ல, பிடிக்காதவர்களுக்கும் கூட கோவை ஆவியின் “ஆவிப்பாபிடிக்கும்.  ஆவிப்பாவுடன் நிறுத்திவிடாது மேலும் பல சிறப்பான புத்தகங்களை தொடர்ந்து வெளியிட நண்பர் கோவை ஆவி அவர்களுக்கு வாழ்த்துகள்.

மீண்டும் வேறொரு வாசிப்பனுபவத்துடன் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 26 பிப்ரவரி, 2014

ஜீரோ கிலோமீட்டர்



திருப்பூரிலிருந்து சென்னை எத்தனை கிலோமீட்டர் இருக்கும்? உங்களுக்குத் தெரியுமா? எனக்குத் தெரியாது. சரி தெரிந்து கொள்ளலாம் என்றால் இருக்கவே இருக்கிறது கூகிள். தேடிப் பார்த்தேன். இப்படிக் காண்பித்தது கூகிள்.



அதாவது 457.6 கிலோ மீட்டர் தொலைவு. ஆனால் இவ்வளவு தொலைவு கிடையாது வெறும் 0கிலோமீட்டர் தான் – நினைத்த நேரத்தில் நீங்கள் திருப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்று விட முடியும் என்கிறார் Twilight Entertainments Pvt. Ltd. தயாரித்திருக்கும் Zero Kilometers குறும்படத்தில் –.

அது எப்படின்னு கேட்கறீங்களா? வாங்க கதைக்குள் பயணிப்போம்.

கதையின் நாயகன் உலகநாயகன் தனது நண்பருடன் ஒரு ஜோசியரின் முன் அமர்ந்து இருக்கிறார். உலகத்தையே ஆளும் பெயருடைய உங்களுக்கு பிரச்சனை – அது உங்கள் பூர்வீக சொத்தாக இருக்கும் வீட்டினால் தான் என்று சொல்கிறார் ஜோசியர். அதை விற்று விடவாஎன்று கேட்கும் நாயகனிடம் விற்பது கடினம். முயற்சித்துப் பாருங்களேன்என்கிறார் ஜோசியர்.

ஒரு வட இந்தியரிடம் 12 லட்ச ரூபாய்க்கு தனது பூர்விகமான வீட்டினை விற்றுவிடுகிறார் உலகநாயகன். பிறகு நண்பரும் அவருமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது வண்டி வழியில் நிற்க, நண்பர் “வீட்டை விற்றாலும் உன் பிரச்சனை தீரலையேஎன்று சொல்கிறார். நின்ற இடத்தில் ஒரு பாழடைந்த வீடு. அதை நோக்கி இயற்கை உபாதையை தீர்த்துக் கொள்ள உலகநாயகன் செல்ல, அந்த வீட்டின் வாசல் நோக்கிச் செல்கிறார்.

அந்த வாசல் வழியே உள்ளே சென்றதும் அவர் சென்னையில் இருக்கிறார்! என்ன அதிசயம் என்று யோசித்து வெளியே வந்து நண்பரையும் அழைக்கிறார்.  தாங்கள் காண்பது கனவா இல்லை நிஜமா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ள நிஜம் என்று புரிகிறது. இதையே ஒரு வியாபாரமாக ஒரு நொடியில் சென்னை செல்ல வாருங்கள்என்று செய்ய ஆரம்பிக்கிறார்கள்.  பணம் வெகுவாகப் புரள்கிறது. உலகநாயகனும் அவரது நிறுவனமும் மிகவும் புகழை அடைகிறது – தொலைக்காட்சிகளில் அவரது பேட்டியெல்லாம் வருகிறது.

அப்படி இருக்கும்போது இவரிடம் வீட்டை வாங்கிய வட இந்தியர், ஒரு பழைய சைக்கிளில் வருகிறார் – “உன்கிட்ட வீடு வாங்கிய நேரம் நான் ரொம்பவே அவஸ்தைப் பட்டுட்டேன் – என்னோட சொத்து எல்லாம் போச்சு! நான் எங்க ஊரோட போறேன்!உன் வீட்டை நீயே வச்சுக்கோஎன்று சொல்லி வீட்டின் பத்திரத்தினைக் கொடுத்துச் செல்கிறார். அடுத்த காட்சி.....

அரசு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இவரிடம் வந்து “உங்கள் நிறுவனம் இருக்கும் இடம் அரசுக்குச் சொந்தமானது. உடனே காலி செய்யுங்கள்என்று இவர்களை அகற்றி விடுகிறார்கள். மீண்டும் சோகமாக தங்களது பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள் உலகநாயகனும் அவரது நண்பரும். வீட்டில் இருக்கும் பரணில் எதையோ வைக்கப் போக, அங்கே என்ன நடக்கிறது என்பது தான் கதையின் முடிவு!

சுவையாகச் சொல்லியிருக்கும் இந்த குறும்படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன் முடிவு என்ன என்று....

குறும்படத்தினை தயாரித்தவர்களுக்கும், அதில் நடித்தவர்களுக்கும், மற்றும் பங்களித்த அனைவருக்கும் நமது வாழ்த்துகள்.  




என்ன நண்பர்களே, குறும்படத்தினை பார்த்து ரசித்தீர்களா?

மீண்டும் சந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.