ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

புகைப்பட உலா – சாலையோர மலர்களும் செடிகளும்….

தமிழகம் வரும்போதெல்லாம் வீட்டிலிருந்து காலை மாலை வேளைகளில் நடைப்பயணம் செய்வது வழக்கமாக இருக்கிறது. அப்படி நடந்து செல்லும்போது சாலையோரங்களில் இயற்கை அன்னை விதைத்த சில செடிகளும், அவற்றின் பூக்களும், வித்தியாசமான வடிவங்களில் காய்களும் என பார்த்துக் கொண்டே நடப்பதுண்டு. இந்த முறையும் அப்படியே பல நாட்கள் பார்த்தபடியே நடந்தேன். இயற்கை அன்னையின் படைப்பில் எத்தனை எத்தனை அழகிய படைப்புகள் – இலைகள், காய்கள், பூக்கள், விதம் விதமான வண்ணங்கள் என ஒன்றுக்கொன்று போட்டி! பல செடிகள் மருத்துவ குணங்கள் கொண்டவை என்றாலும் நமக்கு அவற்றை சொல்பவர்கள் குறைவு.
 
சென்ற முறை இப்படி ஒரு புகைப்பட உலா பதிவிலும் இப்படத்தில் வந்துள்ள துத்தியின் காய் படம் வெளியிட்டபோது, நண்பர் பத்மநாபன் அவர்கள் தான் அதன் மருத்துவ குணத்தினையும், பெயரையும் சொன்னார். அதுவரை பெயர் அறிந்திலேன்! சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் துத்தியின் மருத்துவ பலன்கள் படித்தது நினைவுக்கு வருகிறது. துத்தியின் சில மருத்துவ பலன்கள் இதோ உங்களுக்கும்…. சாலையோரத்தில் வளரும் காட்டுச்செடி தானே என நினைத்த ஒரு செடிக்குள் எத்தனை நன்மைகள்…..

துத்தி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. துத்தி இதயவடிவமான இலைகளையும் பொன் மஞ்சள் நிறமான சிறு பூக்களையும் தோடு வடிவமான காய்களையும் கொண்டது.

 துத்தி பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய் நீக்கி உடலைத் தேற்றும்; கருமேகம், உடல் சூடு போன்றவற்றைக் குணமாக்கும்; சிறுநீரைப் பெருக்கும்.

 துத்தி இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. பசும் துத்தி, பெருந்துத்தி, பணியாரத்துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி என்னும் பல வகைகள் உண்டு.

 துத்தி பற்றி மேலும் தெரிந்து கொள்ள…. துத்தி-மருத்துவ-பயன்கள்

ஒரு நாள் மகளோடு நடந்து சென்று கொண்டிருந்தபோது “தொட்டாசிணுங்கி”யைப் பூக்களோடு பார்க்க, மகளிடம் அச்செடியைக் காண்பித்து இது என்ன செடி தெரியுமா என கேட்டு, சொல்லிக் கொடுத்தேன். நானும் அந்த இலைகளைப் பார்த்திருக்கிறேனே தவிர, மென்மையான அச்செடியின் பூக்களைப் பார்த்த நினைவில்லை. அப்போதே அப்பூவை படம் எடுக்க வேண்டும் என நினைத்தேன். பிறகு ஒரு நாள் மகளுடன் சென்று வித்தியாசமான செடிகளையும் பூக்களையும் படம் எடுத்துக் கொண்டேன் – தொட்டாசிணுங்கியின் பூ படம் எடுக்க முடியவில்லை – வாடி இருந்தது. அப்படி எடுத்த படங்களில் சில இந்த ஞாயிறில் புகைப்பட உலாவாக……


படம்-1: இந்தப் பூக்கள் நெய்வேலியிலும் பார்த்ததுண்டு. இச்செடியில் சிறு சிறு காய்கள் - மணத்தக்காளி அளவில் இருக்கும். அவற்றை சிறு வயதில் சுவைத்ததுண்டு.


படம்-2: துத்தி இலையும் காயும்....



படம்-3: துத்தி பூ.....



படம்-4: இது காயா, பூவா? எத்தனை நெருக்கமாய் இயற்கை அன்னை படைத்திருக்கிறாள்....



படம்-5: இயற்கை வடிவமைத்த ஸ்ப்ரிங்.....



படம்-6: சின்னச்சின்ன இலைகள், அவற்றுடன் சின்னச்சின்ன பூக்கள்.....



படம்-7: இதுவும் கொத்தாக.... காயா, பூவா என்ன என்று தெரியாமல்... ஆனால் பார்க்க அழகாய்!



படம்-8: துளசியின் விதைகள் போலவே இருந்தாலும் இவை துளசிச் செடியில் எடுக்கப்படவில்லை. 



படம்-9: இதுவும் சின்னச் சின்ன பூ....



படம்-10: இப்படத்தில் இருக்கும் வெள்ளைப்பூ வேறு செடியுடையது - தாத்தா தலைவெட்டி தழை என்று சொல்வார்கள் - அதன் பூ. கொத்தாய் இருப்பது என்னவாக இருந்தாலும் அழகு!



படம்-11: இந்தப் பூவும் மிகச் சிறிய பூ தான். ஒரு விதத்தில் அழகாய் இருக்கவே எடுத்தது.



படம்-12: இது காயா இல்லை இலையா?

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? வெளியிட்ட படங்கள் பார்த்து உங்களுக்குத் தெரிந்த செடி/பூவாக இருந்தால் சொல்லலாமே. பதிவு/படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
  
மீண்டும் ச[சி]ந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லியிலிருந்து....

22 கருத்துகள்:

  1. பள்ளியில் விருப்பப்பாடமாக உயிரியல் பயின்றபோது
    இவற்றையெல்லாம் சேகரித்த நினைவுகள் மனதில் எழுகின்றன..

    அழகு... அருமை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளி சமயத்தில் நான் உயிரியல் எடுக்க வில்லை. அதற்கு பதிலாக கணினி அறிவியல்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  2. அனைத்து பூக்களும் இரசிக்க வைத்தன...
    நல்ல விடயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. இயற்கையின் அழகு எழில்....ஆஹா பரவசம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  4. எனக்கு இந்த இடுகை சாதாரணமாகத்தான் தோன்றியது. தொட்டால் சிணுங்கி படத்தைக் காணோம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தொட்டாசிணுங்கியின் பூ படம் எடுக்க முடியவில்லை – வாடி இருந்தது.// என்று எழுதி இருக்கிறேனே நெல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. வணக்கம் சகோ!

    படங்கள் என்றால் வெங்கட்தான் என்று என் மனத்தில் என்றோ பதிவு செய்துவிட்டேன்!.:)
    அவ்வகையில் இன்றும் பிரமித்துப் பார்த்தேன் ஒவ்வோர் பூக்களையும்.
    ஒவ்வொன்றும் விதவிதமாகக் கொள்ளை அழகு! மிகவும் ரசித்தேன்!

    பகிர்தலுக்கு நன்றியுடன் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  8. இயற்கையின் அசாதாரணமான அழகு ஒவ்வொரு பூவிலும் தெரிகிறது. அப்படி தெரிகிற மாதிரி அழகாய் புகைப்படங்கள் எடுத்திருக்கிறீர்கள். பெயர் எல்லாவற்றிற்கும் தெரியதது தான் குறை. நம் ஊரில் தெருவோரங்களில் இரு பக்கங்களிலும் எத்தனையோ மருத்துவச் செடிகள் வளர்கின்றன. எதற்குமே பெயரை அறிந்து கொள்ள முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல செடிகளின் மருத்துவ குணங்களை சொல்லித் தர இப்போது யாரும் இல்லை என்பதும் உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  9. வெங்கட்ஜி படங்கள் எல்லாம் வழக்கம் போல் செம!! நானும் இப்படித்தான் வாக்கிங்க் செல்லும் போது காட்டுப்பூக்கள் பலவற்றையும், பூச்சிகள், புழுக்கள் என்று எல்லாவற்றையும் கேமரா கண்களுக்குள் அமுக்கிவிடுவது உண்டு!!

    ஆனால் இப்போது காமேரா லென்ஸ் எரர் வந்தே விட்டது பர்வத மலை ஏறும் போது படம் எடுத்துக் கொண்டே சென்றதில் ஏறுவது கடினம் இல்லையா...ஒரு பாறையில் இடுக்கு வழியாக ஏறிச் செல்லும் போது அதைப் புகைப்படம் எடுக்க முயற்சி செய்த போது கொஞ்சம் இடித்துவிட்டது....அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் போய்விட்டது. இப்போது மொபைலில்..தான் எடுக்கிறேன்.

    முதல் படத்தில் உள்ள பூ அச்செடியின் பெயர் லாண்டெனா - ஆங்கிலத்தில். தமிழில் உன்னிப்பூ...(நன்றி தோழி கீதாமதிவாணன்) இதன் பூக்களுக்குப் பட்டாம் பூச்சிகள் கூட்டம் அள்ளும்...சிறு வயதில்இதன் பழங்களைச் சுவைத்ததுண்டு. இதன் இலைகளை விலங்குகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆனால் அவை ஸ்லோ பாய்சன் விலங்குகளுக்கு...(இந்தத் தகவலும் தோழி கீதாமதிவாணனிடமிருந்து அறிந்தது...)

    துத்திப்பூ பார்த்துள்ளேன் ஆனால் இப்போது உங்கள் பதிவின் மூலம் தான் துத்திப்பூ என்று அறிகிறேன்...

    தாத்தா தலைவெட்டித் தழை//ஹா ஹா ஹா இதற்கு இபப்டி ஒரு பெயரா...இதைப் பல இடங்களிலும் காணலாம்..நானும் எடுத்து வைத்துள்ளேன். சிறு வயதில் இதன் அடிப்பகுதியில் (கழுத்து என்று சொல்வது வழக்கம்!!) இரண்டு விரல்கள் வைத்துக் கொண்டு "ஒழுங்கா பள்ளிக் கூடம்போவியா?" என்று கேட்ட்டுவிட்டு அப்பூ பதில் சொல்வது போல "மாட்டேன்" என்று சொல்லிவிட்டு..."பாடங்கள் ஒழுங்கா படிப்பியா" "மாட்டேன்" இப்படி ஒவ்வொன்றாகக் கேட்டு மாட்டேன் என்ற பதிலையும் சொல்லிவிட்டு, அப்ப நீ பேட் கேர்ள் போ என்று சொல்லி சுண்டி விடுவது வழக்கம். அதுவும் தெறித்து விழும்...யார் சுண்டுவது அதிக தூரத்தில் விழுகிறது என்று போட்டியிடுவதும் வழக்கம்....அதாவது தலை தெறித்து விழுவது!!!

    மற்ற படங்கள் என்ன பூ என்று தெரியவில்லை. இங்குப் பார்க்கவும் இல்லை. நானும் எடுத்து வைத்துள்ளேன் சில ...

    எல்லாப் படங்களையும் ரசித்தேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேமரா லென்ஸ் எரர் - விரைவில் வேறு ஒரு புதிய கேமரா உங்களுக்குக் கிடைக்கட்டும்.

      தாத்தா தலைவெட்டித் தழை - இதுவும் மருத்துவ குணம் நிறைந்தது. காயங்கள் ஏற்பட்டால், இதன் தழையைக் கசக்கி, சாறுடன் சுண்ணாம்பு சேர்த்து போட்டால் விரைவில் குணம் ஆகும்.

      உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. நல்ல விளையாட்டு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  10. வெங்கட்ஜி நீங்கள் சொல்லியிருப்பது போல மருத்துவ குணங்கள் நிறைந்த செடிகள் பல உள்ளன...ஆனால் நமக்குத்தான் தெரிவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  11. கிராமத்து மனிதர்களுக்கு வீட்டைச்சுற்றி வளரும் செடிகொடிகள் இவற்றின் மருத்தவ பயன்கள் பற்றிய அறிவு இருந்தது. தற்போது கிராமத்து இளைஞர்களுக்குக் கூட இத்தகைய அறிவு இல்லை. அலோபதி மருத்துவம் இவற்றை அன்னியமாக்கிவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலோபதி மருத்துவம் இவற்றை அன்னியமாக்கிவிட்டது - நூற்றுக்கு நூறு உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....